உழவுக்கும், பாலுக்கும் ஏற்ற, இரண்டரை அடி நாட்டு மாடு…!
நாம் மறந்துபோன, பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் நாட்டு மாடுகளின் பங்களிப்பு அபாரமானது. இவற்றின் சிறப்பே, குறைந்த தீவனத்தை எடுத்துக் கொண்டு உழவுக்கு உதவி செய்வதோடு, கணிசமான அளவில் பாலும் கொடுப்பதுதான். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்கு தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர், மோர், நெய்க்குக்கூட தனிச்சுவை இருப்பதை மறுக்க முடியாது!
காங்கேயம், உம்பளாச்சேரி, புலிகுளம், மணப்பாறை, பர்கூர்… என தமிழ்நாட்டுக்கென பாரம்பரிய ரகங்கள் இருப்பதுபோல…
ஆந்திராவுக்கான சிறப்பு, புங்கனூர், ஓங்கோல் இன மாடுகள். அதிலும் ‘புங்கனூர் குட்டை’ என்ற ரகம் இந்திய நாட்டினங்களில் அருகி வரும் இனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலகிலேயே இது தான் மிகவும் குள்ளமான நாட்டு மாட்டு இனம்.
தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையோரத்தில் இருக்கும் சித்தூர் மாவட்டம், புங்கனூர் மாடுகளுக்குப் புகழ்பெற்ற பகுதி.
இந்த புங்கனூர் குட்டை மாடுகள் 70-90சென்டி மீட்டர் உயரமும், 110 - 120 கிலோ எடையும் கொண்டவைகள். இவை நாள் ஒன்று 5 கிலோ தீவனங்களையே உட்கொள்ளும்.
நிறைந்த கொழுப்பு… அதிக புரோட்டீன்!
”வெள்ளை, பழுப்பு, கருப்பு, சாம்பல்னு நாலு நிறத்துல இருக்குது. இதோட பால்ல கொழுப்பு குறைவு. இப்பெல்லாம் தினமும் இரண்டு, மூணுவேளை தவறாம டீ, காபி, பால் குடிக்கிறாங்க. இந்த மாட்டோட பால் ரொம்ப நல்லது. இதுல, புரோட்டீன் சத்து கூடுதலா இருக்கு. பால் ரொம்ப சுவையா இருக்கும். முப்பது வருஷங்களுக்கு முன்ன மாவட்டம் முழுவதும் பரவலா இருந்துச்சு. நாட்டு மாட்டோட அவசியம் நிறைய பேருக்குத் தெரியாததால, இந்த இனங்களோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுச்சு. முன்ன இதோட காளைகளை உழவுக்குக்கூட பயன்படுத்தியிருக்காங்க. இப்போ, காளைகள் குறைஞ்சு போயிடுச்சு. பசுக்களைக் கூட, பாலுக்காகத்தான் வளர்க்கறாங்க. இன்னிக்கு ஆந்திரா முழுசும் தேடினாலே, நூறு மாடுகளுக்குள்ளதான் இருக்கும்.
ஒரு நாளைக்கு ஆறு லிட்டர் பால்!
சாதாரணமா நாட்டு மாடுகளுக்குக் கொடுக்கிற பச்சைப்புல், சோளத்தட்டு, வைக்கோல், தவிடு கலந்த தண்ணி மட்டுமே தீவனமாகக் கொடுத்தா போதும். இதுக்கு பாயுற பழக்கம் இல்லாததால, யாரும் பயமில்லாம பராமரிக்கலாம். ஒருவேளைக்கு ரெண்டு லிட்டர்ல இருந்து மூணு லிட்டர் வரைக்கும் பால் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஆறு லிட்டர்.
No comments:
Post a Comment